×

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு: ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் (40505) புறநகர் மின்சார ரயில் ஞாயிற்றுகிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுகிறது. இன்று காலை 4.35 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் 5.20 மணியளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து ரயில் புறப்பட்ட போது நான்கு பெட்டிகள் கழன்று பின்னோக்கி சென்றுள்ளது. இதனை அறியாத லோகோ பைலட் ரயிலை இயக்கியுள்ளார். சுமார் 50 மீட்டர் தூரம் சென்றதும் ரயில் இணைப்பில் நான்கு பெட்டிகள் இல்லாததை அறிந்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார்.

ரயில் இரண்டு பகுதிகளாக பிரிந்திருப்பதை அறிந்த பயணிகள் விபத்து ஏற்பட்டதாக நினைத்து உடனே ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் நிலைமையை எடுத்துக் கூறி பயணிகளை சாந்தப்படுத்தினர். கழன்று சென்ற நான்கு பெட்டிகளை ரயிலுடன் இணைக்கும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் மின்சார ரயில் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் காலையில் பணிக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கிண்டி, பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர் என பல்வேறு ரயில் நிலையங்களில் மக்கள் காத்திருந்தனர்.

கழன்ற 4 பெட்டிகள் ரயிலுடன் இணைக்கப்பட்டு பயணத்தை தொடர்ந்தவுடன் மற்ற ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் இணைப்பு பகுதியான கப்லிங் உடைந்ததால் பெட்டிகள் கழன்றன. காலை 6.55 மணியளவில் பழுது சரிசெய்யப்பட்டது. பயணிகள் வசதிக்காக பாண்டிச்சேரி பயணிகள் விரைவு ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று சென்றது. புறநகர் ரயில்களை எழும்பூரில் இருந்து பிரதான வழியில் இயக்க அறிவுறுத்தப்பட்டது. செங்கல்பட்டு – கடற்கரை வழித்தடத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு சில மணி நேரத்தில் ரயில் சேவை முழுவதும் சீரானது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் மின்சார ரயிலின் 4 பெட்டிகள் கழன்றதால் பரபரப்பு: ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Saithapet Railway Station ,Chennai ,Chennai Beach Railway Station ,Chengalputtu ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...